கோவையின் மையப் பகுதியான நியூ சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அருகே, இரு மகள்களுடன் வசித்து வரும் பெண்ணின் வீட்டு வாசலிலேயே அடையாளம் தெரியாத போதை ஆசாமி ஒருவன் அசுரத்தனமாக உறங்கிக் கிடந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவலர் வந்து அந்த ஆசாமியை எழுப்பி அனுப்பிய செல்போன் வீடியோ வைரல்.கோவையின் குடியிருப்பு உள்கட்டமைப்பிற்குள் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ள இந்த விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, நியூ சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அருகே உள்ள குடியிருப்பில் சிவசங்கரி என்ற பெண்மணி தனது இரண்டு இளம் மகள்களுடன் வசித்து வருகிறார். இவர்கள் வழக்கம் போலத் வேலைகளுக்குச் சென்று விட்டு, இன்று இரவு 7.30 மணி அளவில் வீட்டிற்குத் திரும்பி உள்ளனர்.
சிவசங்கரி தனது மகள்களுடன் வீட்டின் காம்பவுண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற போது, அவர்களது வீட்டின் பிரதான கதவின் முன்பாக முற்றிலும் அடையாளம் தெரியாத போதை ஆசாமி ஒருவன் அசைவற்று போதையில் சுருண்டு உறங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
போதை ஆசாமியைத் திடீரென எழுப்பினால் எங்கே ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அத்துமீறல்கள் நடந்து விடுமோ ? என்ற பயத்தில், அந்த மூன்று பெண்களும் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீட்டின் உள்கட்டமைப்பிற்குள் நுழைய முடியாமல் வெளியிலேயே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தவித்து உள்ளனர்.
தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிய அந்தப் பெண்கள், உடனடியாகத் தமிழக காவல் துறையின் அவசர உதவி எண்ணான 100-க்கு அடுக்கடுக்காகப் பலமுறை அழைத்து உள்ளனர்; ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் பக்கம் இருந்து எவ்விதப் பதிலும் வரவில்லை.
நள்ளிரவு பயங்கரம்.. 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் – காட்டில் மீட்கப்பட்ட சடலம்..!
இதனைத் தொடர்ந்து அவர்கள் வேறு வழியின்றி முதலமைச்சரின் தனிப் பிரிவு அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது, அங்கு இருந்த அதிகாரிகள், ‘நீங்களே அந்த ஆசாமியின் முகத்தில் தண்ணீரை ஊற்றி எழுப்பிப் பாருங்கள்’ என அலாதிப் பொறுப்பற்ற அறிவுரையை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான பிரத்யேகப் பாதுகாப்பு உதவி எண்ணான 181 எண்ணிற்குத் தகவல் தெரிவித்தும் அங்கு இருந்தும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. பெண்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, இறுதியாகக் காட்டூர் காவல் நிலையத்திற்குத் தகவலறிந்த அங்கு வந்த காட்டூர் காவல் நிலைய காவலர் ஒருவர் அங்கு உறங்கிக் கொண்டு இருந்த போதை ஆசாமியைத் தட்டி எழுப்பிய காவலர், அவரிடம் விசாரணை நடத்தினார்.
ஆனால், அசுரப் போதையில் இருந்த அந்த ஆசாமியால் ஒழுங்காக நிற்கக் கூட முடியாமல் தள்ளாடியபடி, வீட்டின் மதில் சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றான்.
அவனிடம் பெயர் விபரங்களைக் கேட்ட போது தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்றும், வீடு எங்கு உள்ளது எனக் கேட்டதற்குப் பக்கத்திலுள்ள ‘பாலகிருஷ்ணா ரோடு’ என்றும் உளறி உள்ளான்.
இதையடுத்து, அந்தப் போதை ஆசாமியை அங்கு இருந்து மெதுவாக நடந்து செல்லுமாறு காவலர் எச்சரித்து வழி அனுப்பி வைத்தார்.அங்கு இருந்த ஒருவர் இந்த பரபரப்பு நாடகத்தையும் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

