இயக்குநர் சீனு ராமசாமி, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கரூரில் ஆற்றிய உரை குறித்து தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் பாராட்டு தெரிவித்து ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார் கரூரில் நடைபெற்ற நிகழ்வில், “யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், ‘இது விஜய் ஆட்சி, ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்க முடியாது’ என்று தைரியமாகச் சொல்லுங்கள், நான் இருக்கிறேன்” என்று முதல்வர் விஜய் பேசியிருந்தார்.
இதைச் சுட்டிக்காட்டியுள்ள சீனு ராமசாமி, “லஞ்சம் கொடுக்காதே, நான் இருக்கிறேன்” என்ற முதல்வரின் வாக்கு, எளிய மக்களின் நம்பிக்கையைத் தட்டி எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு அரசு தன் குடிமக்களுக்குத் தரும் மிகச்சிறந்த பாதுகாப்பு இதுதான் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
“தெளிவு, துணிச்சல்”.. கரூர் உரையைப் பாராட்டிய நடிகர் ஜீவா ரவி..!
இந்த மாற்றம் நிலைக்க வேண்டுமானால், மக்கள் தரப்பிலும் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ள அவர், “லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய்; லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் ஒன்றுதான். இதை உணர்ந்து நாம் மாறினால் நேர்மையான பாதை தெளிந்துவிடும்” என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார். முன்னதாக, திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக முதலமைச்சரிடம் ஆறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்திருந்த சீனு ராமசாமி, தற்போது முதல்வரின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

