தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க அந்த மேஜிக் எண்ணான 118 இடங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மாலை தமிழக பொறுப்பு கவர்னரை சந்தித்தார். அப்போது, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான அந்த 118 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் விஜய் வந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று கவர்னர் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறுவதற்கு வீசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, முடிவு செய்ய சம்பந்தப்பட்ட கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மீண்டும் கவர்னரை சந்திக்க உள்ளார்.
த.வெ.க-வை புறக்கணிப்பதா?.. விஜய்க்கு ஆதரவாக சிபிஎம் பொதுச்செயலாளர் அதிரடி பேச்சு..!
இன்று மாலை 4:30 மணிக்கு கவர்னரை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரும்பான்மை காண எண்ணுடன் தன்னை சந்திக்க வருமாறு கவர்னர் கூறியிருந்த நிலையில், விஜய்க்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததா? அல்லது வேறு ஏதேனும் அரசியல் நகர்வுக்கு விஜய் திட்டமிட்டுள்ளாரா? என தற்போது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

