வீட்டிலேயே சுவையாக செய்யக்கூடிய ‘நெத்திலி மீன் தொக்கு’
தேவையான பொருட்கள்
- நெத்திலி மீன் – 250 கிராம் (சுத்தம் செய்தது)
- சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1 முதல் 2 ஸ்பூன்
- மல்லித்தூள்– 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
- புளி – சிறிய எலுமிச்சை அளவு (கரைத்துக்கொள்ளவும்)
- நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு, சோம்பு, கருவேப்பிலை – தாளிக்க
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
Step 1: முதலில் சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலி மீன்களுடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாகப் பிரட்டி, கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். (மீன் உடையாமல் இருக்க லேசாக வறுப்பது நல்லது).
Step 2: அதே கடாயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, கடுகு, சோம்பு மற்றும் கருவேப்பிலை தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
மணமணக்கும் நார்த்தங்காய் சாதம்.. லஞ்ச் பாக்ஸிற்கான சாய்ஸ்..!
Step 3: வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். தக்காளி குழைந்ததும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
Step 4: இப்போது கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றி, மசாலாவின் பச்சை வாசனை போய் எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதிக்கவிடவும். மசாலா கெட்டியான பதத்திற்கு வந்ததும், நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள நெத்திலி மீன்களை மெதுவாக அதனுடன் சேர்க்கவும். மீன் மசாலாவை நன்றாக உறிஞ்சி சுண்டி வரும் வரை மிதமான தீயில் 2 நிமிடங்கள் வைத்து, இறுதியாகக் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான நெத்திலி மீன் தொக்கு தயார்!

