மலைப் பகுதிக்குச் செல்லப் பேருந்துகள் இன்றித் தவிப்பு: கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கப் பயணிகள் கோரிக்கை. கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாததால் பயணிகள் மணி கணக்கில் காத்து இருந்து கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு கோவையில் இருந்து ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட நீலகிரி மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.
இதற்காக மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்து உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு புதிய கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் – மேட்டுப்பாளையம் சாலை நாள்தோறும் நூற்றுக் கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர்.
தக்காளி பிரியர்களுக்கு ஷாக்.. வறட்சி காரணமாக கிடுகிடுவென உயரும் தக்காளி விலை..!
இந்நிலையில், இப் பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டி நோக்கிச் செல்லும் அரசுப் போக்குவரத்துத் கழகப் (TNSTC) பேருந்துகள் மற்றும் அரசு விரைவுப் பேருந்துகள் (SETC) போதிய எண்ணிக்கையில் இயக்கப்படுவதில்லை எனப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீண்ட நேர இடைவெளியில் அரிதாக வரும் ஓரிரு பேருந்துகளிலும் ஏறுவதற்குப் பயணிகள் இடையே கடும் அடிதடியும் தள்ளுமுள்ளும் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுடன் ஊட்டி செல்லக் காத்து இருக்கும் பயணிகள் பேருந்து நிலையத்திலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பயணிகள் கூறுகையில்: “கோவையில் இருந்து ஊட்டிக்குச் செல்லும் பிரதானப் பேருந்து நிலையமாக இது மாற்றப்பட்ட நிலையிலும், இங்கு இருந்து ஊட்டிக்குச் செல்லப் போதிய பேருந்துகள் விடப்படுவதில்லை. இதனால் அதிகக் கட்டணம் கொடுத்துத் தனியார் வாகனங்களை நாட வேண்டிய சூழல் உருவாகிறது. எனவே அரசுப் போக்குவரத்துத் கழகம் உடனடியாக தலையிட்டு, மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டிக்குக் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

