கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படம் மட்டும் ஆணையர் இருக்கை அருகே வைக்கப்பட்டிருந்தது.அப்போது, முன்னாள் முதல்வர் காமராஜரின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என்று காங்கிரஸ் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, “முந்தைய ஆட்சியின் முதல்வரின் புகைப்படம் மட்டுமே வைக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது” என்று மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்ததையடுத்து, ஸ்டாலின் புகைப்படம் மட்டும் அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அரங்கின் தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது.
தற்போதைய முதல்வர் விஜய் புகைப்படத்துடன், அதற்கு அருகில் முன்னாள் முதல்வர்கள் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன.
அரசு பேருந்து நடத்துனர் – இன்ஸ்பெக்டர் மோதல்.. போக்குவரத்துக் கழகம் விசாரணை..!
மேலும், அரங்கின் வலப்புறச் சுவரில் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களும், இடப்புறச் சுவரில் பெருந்தலைவர் காமராஜர், பக்தவச்சலம், சி. ராஜகோபாலாச்சாரி ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இதனுடன் மகாத்மா காந்தியின் உருவப்படமும் அரங்கில் வைக்கப்பட்டிருந்தது.
அதே நேரத்தில், முன்னாள் முதல்வர்கள் வி.என். ஜானகி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் பல்வேறு முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் ஒரே நேரத்தில் இடம்பெற்றிருப்பது உறுப்பினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், அரசியல் வட்டாரங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

