கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டப்பாளையம் பகுதியில் முன்பகை காரணமாக தவறான தகவல் கொடுத்து மாநகராட்சி அதிகாரிகளின் துணையுடன் வீட்டை இடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டலம் 39 வது வார்டு சுண்ட பாளையம் வடக்குரத வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும், இவரது முன்புறம் வீட்டில் குடியிருந்து வரும் ராஜராஜன் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு தவறான தகவல்களை அளித்து செல்வராஜ் வீடு பொது ரோடு என்றும், அவர் ஆக்கிரமித்து வீடுகட்டி இருப்பதாகவும் கூறி ஒரு சில மாநகராட்சி அதிகாரிகளின் துணையோடு செல்வராஜின் வீட்டை கடந்த திங்கட்கிழமை மதியம் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்களோடு இடிக்க முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, செல்வராஜன் மனைவி மல்லிகா மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மீண்டும் முளைக்கிறதா கள்ளச்சாராய கும்பல்?.. விடிய விடிய நடந்த அதிரடி வேட்டை..!
முறையான ஆவணங்கள் எதையும் சரி பார்க்காமல் முன்பகை காரணமாக தவறான தகவல்களை அளித்துள்ள ராஜராஜன் மற்றும் தங்களது வீட்டை இடிக்க வந்த மாநகராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி செல்வராஜின் மனைவி மல்லிகா கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் மேற்கு மண்டல துணை ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.
மேலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் தாங்கள் நீதிமன்றத்தை நாட போவதாகவும் செல்வராஜின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

