கோவை, ஆலாந்துறை அடுத்த காருண்யா நகர் அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட முன்விரோதத்தால், மூதாட்டி ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ஆலாந்துறை காருண்யா நகர் அடுத்த நல்லூர்வயல் சப்பாணிமடை பகுதியைச் சேர்ந்தவர் 72 வயதான ஜெசி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு அருகாமையில் வசித்து வருபவர் 47 வயதான நோபிள் வாட்சன் இவர்கள் இருவருக்கும் இடையே தங்கள் வீட்டின் முன்பு குப்பை கொட்டுவது தொடர்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை ஜெசி, நோபிள் வாட்சன் வீட்டின் முன்பு குப்பை கொட்டியதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த நோபிள் வாட்சன் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் ஜெசியின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெசி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
வேரோடு சாய்ந்த ராட்சத மரம்.. சரக்கு வாகனம் மீது விழுந்து ஓட்டுநர் படுகாயம்..!
தகவல் அறிந்து வந்த காருண்யா நகர் போலீசார், ஜெசியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோட முயன்ற நோபிள் வாட்சனை அதிரடியாகக் கைது செய்த போலீசார், கொலைக்கான முழு பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது அந்த கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

