கோவை மாநகராட்சி 73-வது வார்டு கவுன்சிலரும், நகரமைப்பு குழு தலை வருமாக இருப்பவர் சந்தோஷ் என்ற சோமு. மாநகராட்சி கவுன்சிலர். இவருக்கு 8 வயதில் வெண்பா என்ற மகள் இருந்தார்.
கடந்த திங்கட்கிழமை வெண்பாவிற்கு திடீரென தலைவலி, வாந்தி ஏற்பட்டு உள்ளது. இதை அடுத்து சிறுமியின் தந்தை, மகளை கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், சிறுமிக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும், மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, கவுன்சிலர் சந்தோஷ் என்ற சோமு தனது மகள் வெண்பாவை, அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், சிறுமியின் மூளை செயல் இழந்து அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது.
இதனை மருத்துவர்கள், கவுன்சிலர் சந்தோஷ் என்ற சோமுவிடம் தெரிவித்தனர். இதை அடுத்து கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் குடும்பத்தினர் தங்களது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
சிறுமியிடமிருந்து சிறுநீரகம், கல்லீரல், கண் உள்ளிட்ட உறுப்புகள் எடுக்கப்பட்டு 7 பேருக்கு பொருத்தப்பட்டு உள்ளது. 8 வயதில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் தற்போது 7 பேர் மறுவாழ்வு பெற்று உள்ளனர்.

