தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்துத் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து ஆவேசமாகப் பேசியுள்ளார்.
“தமிழ்நாட்டின் தூய சக்தி” என்று கூறிக்கொள்ளும் தவெக தலைவர் விஜய், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த வேலையில்லாத பட்டதாரிகளுக்கான ரூ. 4,000 உதவித்தொகை இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை என்றும், ஆனால் ‘வேலையில்லா பட்டதாரி’ (VIP) படத்தில் நடித்த நடிகர் தனுஷே இப்போது அரசியலுக்கு வந்துவிட்டதாகவும் கூறி அவர் நையாண்டியாகப் பேசியது சோஷியல் மீடியாவில் தீயாகப் பரவி வருகிறது.
திமுக மீது தொடர் ஐடி ரெய்டுகள் மற்றும் மத்திய அரசின் நெருக்கீடுகள் வந்தபோதும் கட்சியை விட்டு யாரும் வெளியேறவில்லை என்று குறிப்பிட்ட அவர், கடந்த சில மாதங்களாக நடந்துள்ள சட்டம் ஒழுங்குச் சிக்கல்களையும் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடினார்.
34 ஏக்கரில் பிரமாண்ட மேடை.. தாராபுரத்தில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் அதிரடிப் பிரச்சாரங்கள் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்துத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, தவெக தலைவர் விஜய்யையும் அவரது கட்சியையும் தனது பேச்சின் மூலம் கடுமையாக விமர்சித்ததுடன் நையாண்டியாகவும் கிண்டலடித்தார்.
கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய கனிமொழி, “தூய சக்தி, தூய சக்தி என்று கூறி மக்களை ஏமாற்றும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. சினிமாவில் பழைய படத்தை ரீ-ரிலீஸ் செய்வது போல மக்களைச் குழப்புகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். மேலும், “தவெக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட வேலையில்லாத பட்டதாரிகளுக்கான ரூ. 4,000 உதவித்தொகை இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை; ஆனால், ‘வேலையில்லா பட்டதாரி’ (VIP) படத்தில் நடித்த நடிகர் தனுஷே அரசியலுக்கு வந்துவிட்டார்” என அவர் குறிப்பிட்டதும், கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையும் கரவொலியும் எழுந்தது. தவெக தலைவர் விஜய்யை நடிகர் தனுஷின் ‘விஐபி’ படத்துடன் ஒப்பிட்டுக் கனிமொழி பேசிய இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

