கோவை, வெள்ளானைப்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் பாரில், இன்று இரவு மது அருந்த வந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர அடிதடி மற்றும் கோஷ்டி மோதலாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, வெள்ளானைப்பட்டி பகுதியில் ‘சுவை அமுது’ என்ற பெயரில் ‘11 to 11’ தனியார் மதுக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாளான இரவு என்பதால், இந்த பாரில் மது அருந்துவதற்காக நூற்றுக் கணக்கான மதுப்பிரியர்கள் குவிந்து இருந்தனர். அப்போது, அங்கு வெவ்வேறு மேஜைகளில் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்த இரு வேறு கும்பலைச் சேர்ந்த நபர்களுக்கு இடையே திடீரென ஏதோ ஒரு லேசான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
மது போதை உச்சத்தில் இருந்ததால், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டத் தொடங்கினர். பாட்டில்கள், நாற்காலிகள் பறந்தன.வார்த்தை முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த இரு தரப்பு மதுப்பிரியர்களும் திடீரெனத் தங்களது கைகளாலும், அங்கு இருந்த மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்தும் ஒருவரையொருவர் ஓட ஓட விரட்டிப் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.
இந்தத் திடீர் கேங் வார் மோதலால், பாரில் இருந்த இதரப் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.இரு தரப்பினரும் ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு மாறி, மாறித் தாக்கிக் கொண்டதால், சுவை அமுது பார் வளாகமே சில நிமிடங்களில் போர்க்களமாக மாறியது.இந்தக் கொடூர மோதல் குறித்து அங்கு இருந்தவர்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சன்ரூஃபில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்கள்.. சாலையில் அரங்கேறிய ஆபத்தான செயல்..!
இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு நீலாம்பூர் காவல் நிலைய போலீஸார் சைரன் சத்தத்துடன் அதிரடியாக வாகனங்களில் வந்து இறங்கினர். போலீஸார் உள்ளே நுழைவதைக் கண்டதும், அடிதடியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த கும்பல்களும், பயத்தில் பாதியிலேயே மது அருந்திக் கொண்டு இருந்த இதர மதுப்பிரியர்களும் தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு அங்கு இருந்து அவசர, அவசரமாக அலறி அடித்துக் கொண்டு தப்பியோடினர்.
தற்பொழுது சம்பவ இடத்தில் காவல்துறையினர், பாரில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளைப் பறிமுதல் செய்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்து பயங்கர மோதலில் ஈடுபட்ட ரவுடி கும்பல் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

