ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசிய புகாரில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 4 பேர் (ரமேஷ், சீனிவாசன், செல்வம் உள்ளிட்டவர்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் யூடியூபர் திருநாவுக்கரசு, திமுக பிரமுகர்களான கார்த்திக், ரமேஷ் மற்றும் நரேஷ் உள்ளிட்டவர்கள் ஆரம்பகட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக சுமார் 10 முதல் 12 எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து இந்த பேரம் பேசப்பட்டதாகவும், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின்போது ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்க வலியுறுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலமைச்சர் விஜய்க்கு குடைச்சல்?.. செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு..!
இதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், தவெக தரப்பில் மேலும் பல எம்.எல்.ஏ.க்களிடம் இதுபோன்று பேரம் பேசப்பட்டதா என்பது குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

