கோவை மதுக்கரை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கரை ஜே.ஜே நகரைச் சேர்ந்த சிவசங்கரன், நேற்று தனது நண்பர்களுடன் மதுக்கரை உப்பு பாறையில் உள்ள கல்லுக்குழிக்குக் குளிக்கச் சென்றுள்ளார்.”
அப்போது ஆழமான பகுதியில் உள்ள பாறையைத் தொட்டுவிட்டு வருவது என நண்பர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் சிவசங்கரன் பாறையைத் தொட்டுவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கினார்.
தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார் மற்றும் கோவம்புதூர் தீயணைப்புத் துறையினர் நேற்று முதல் தீவிரமாகத் தேடி வந்தனர். ஆழமான பகுதி என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், இன்று 2-வது நாளாக நடைபெற்ற தேடுதல் பணியில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

