கோவையில் ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 16 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை எட்டிமடை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டதில், எவ்வித ஆவணங்களும் இன்றி கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், காரில் வந்த கர்நாடகாவைச் சேர்ந்த ரிஷ்வான் பாஷா என்பவர், கேரளாவில் வேன் வாங்குவதற்காக இந்தப் பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அவரிடம் உரிய ரசீதுகள் எதுவும் இல்லை.
இதையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் அவர்களின் உத்தரவின்படி, பறிமுதல் செய்யப்பட்ட 16 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபோன்று ஆவணமின்றி பணம் கொண்டு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

