மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது சதிவலை என்றும், இந்த விஷப் பரீட்சையைக் கைவிட வேண்டும் என்றும் முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை! நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.! கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்! பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு @CMOTamilNadu கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

