கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக தாக்கல் செய்துள்ள மனு, இன்று (ஜூலை 7, 2026) உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. தவெக அமைச்சர்கள் கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசி வருவது சிபிஐ விசாரணையைப் பாதிக்கும் என்றும், சாட்சிகளைக் கலைக்க முயற்சிப்பதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.
எனவே, அவர்கள் பொதுவெளியில் இது குறித்துப் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஜூலை 10-ஆம் தேதி கரூர் சென்று, கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு, அந்த குடும்பத்தினர் வழக்கில் முக்கியச் சாட்சிகளாக இருப்பதால், விசாரணையை பாதிக்கலாம் என்று திமுக அச்சம் தெரிவித்துள்ளது. ஜூலை 2-ஆம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் சம்பவத்திற்கு முந்தைய திமுக அரசுதான் காரணம் என்று பேசியது சர்ச்சையானது. இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் திமுக மனுவில் வலியுறுத்தியுள்ளது.
அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்கள்.. வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!
நீதிபதிகள் இசானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. சிபிஐ விசாரணை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய அரசியல் சூழலில் இந்த வழக்கு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த விசாரணையின் முடிவைப் பொறுத்தே முதலமைச்சரின் கரூர் பயணம் குறித்த தெளிவான முடிவு தெரியவரும்.

