கோவை தென்கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலையில், இன்று அதிகாலை 4-வது மலைப் பாதையில் ஏறிய போது இளைஞர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பத்தினர் தடுத்தும், மாரடைப்பு சிகிச்சை முடிந்து மீண்டும் மலை ஏறியதே இந்த விபரீதத்திற்குப் பலியானதாகத் தெரியவந்து உள்ளது.
கோவை, மதுக்கரை அடுத்த வழுக்குப்பாறை, கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (32), இன்று அதிகாலை வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்குத் தனியாகப் பயணம் மேற்கொண்டார். 4-வது மலைப் பாதையில் உள்ள முழங்கால் திட்டு அருகே அவர் மயங்கிக் கிடப்பதாகத் தகவல் கிடைத்ததும், வனத்துறையினர் மற்றும் சுமைப் பணியாளர்கள் டோலி மூலம் அவரை மீட்டு அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் மயில்சாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது.
அதிமுக – திமுக இணைந்து ஆட்சி?.. கனிமொழியின் கருத்தால் சூடுபிடிக்கும் அரசியல் களம்!
விசாரணையில் மயில்சாமி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பும் இதே போல் மலை ஏறி உள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பாதியிலேயே திரும்பிச் சென்று சிகிச்சை பெற்று உள்ளார். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, “இப்போதைக்கு மலை ஏற வேண்டாம்” என உறவினர்கள் எச்சரித்த போதிலும், யாரிடமும் சொல்லாமல் மீண்டும் இன்று அதிகாலை தனியாக மலை ஏறி உள்ளார்.
7 வயது மகனைத் தவிக்க விட்டுச் சென்ற மயில்சாமியின் இந்த முடிவு, அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்து உள்ளது.இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை வெப்பம் மற்றும் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக இதய நோயாளிகள் மலை ஏறுவது தவிர்க்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

