கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறு பேர் ஆளுங்கட்சிக்கு தாவியுள்ள நிலையில், இரண்டு தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆதாயத்திற்காக கட்சி மாறிய வேட்பாளர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு மக்களிடம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது நல்ல அறிகுறியாக உள்ளது.ஆதாயத்திற்காகவும், அரசியல் சித்து விளையாட்டிற்காகவும் கட்சி மாறும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்கள் நல்ல படிப்பினையாக அமையும்.
இந்த இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடைபெறாத வகையில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இன்றிரவும், நாளையும் முக்கியமான நாட்கள். வெளியில் இருந்து வரும் தூண்டுதல்களுக்கு ஆளாகாமல் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.கடந்த காலங்களில் நடைபெற்ற திருமங்கலம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களைப் போல இல்லாமல், இந்த இடைத்தேர்தல் தூய்மையான முறையில் நடைபெற வேண்டும்.தாராபுரம் தொகுதியில் ஆங்காங்கே பண நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஏற்கனவே வேட்பாளர்கள் சிலர் தவறிழைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், தாராபுரமும் மதுராந்தகமும் முன்மாதிரியான இடைத்தேர்தலாக அமைய வேண்டும்.
SIR விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை தேவை SIR விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.16 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், இது யாருக்காக நடைபெற்றது, இதில் அரசியல் தலையீடு இருந்ததா என்பது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.வேலியே பயிரை மேய்ந்து விட்டால் ஜனநாயகம் தழைக்காது’ எனக் குறிப்பிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, தலைமைத் தேர்தல் அதிகாரியே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!
உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.Form 6 தொடர்பாகவும் குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும். நடுநிலையுடன் விசாரிக்கும் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக உள்ளது.
பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்தத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.கேரளாவில் 1985-ஆம் ஆண்டு இடைமலையாறு அணை கட்டப்பட்ட பின்னர், கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் ஆனைமலையாறு – நல்லாறு அணை திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த அணைத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் மாதம் இருசக்கர வாகனப் பேரணி நடத்த உள்ளோம்.
மாநில அரசு இதில் மெத்தனம் காட்டக்கூடாது. கேரள அரசும் ஒத்துழைக்க வேண்டும்.கட்சி தாவல் சட்டத்தில் திருத்தம் தேவை மூன்று மாதங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குதிரை பேரம் காரணமாக தற்போது வேறு கட்சிக்கு மாறி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.இவர்களைப் போன்றவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும்.குறுகிய நோக்கத்துடனும், ஆதாயத்திற்காகவும் கட்சி மாறுபவர்களைத் தடுக்க கட்சி தாவல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.தாராபுரத்தில் சில இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன.
இதை சட்டரீதியாக தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.SIR குளறுபடிகளால் சில தேர்தல் முடிவுகள் மாறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதற்கும் உரிய விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம்.கவர்ச்சியை வைத்து இனி அரசியல் செய்ய முடியாது கடந்த தேர்தலின்போது விஜய்க்கு இருந்த கவர்ச்சி தற்போது இல்லை.தாராபுரம், மதுராந்தகம் பகுதிகளில் இரண்டு, மூன்று நாட்கள் பிரசாரம் செய்தாலும், கவர்ச்சியை மட்டுமே வைத்து இனி எதையும் சாதிக்க முடியாது.
பல கிராமங்களில் வேட்பாளர்கள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அது ஏற்றுக்கொள்ளக்கூடிய வெற்றியாக இருக்காது.கவர்ச்சியை மட்டுமே வைத்து ஆட்சியை நடத்திவிடலாம் என யாரும் நினைக்கக்கூடாது. GST வரி வருவாய், மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மூன்று மாத ஆட்சியில் அரசு இயந்திரம் சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை. இவ்வாறு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

