கோவை, செட்டிபாளையம் பகுதியில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்றால், கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த இளைஞர்களின் விளையாட்டு உபகரணங்கள் காற்றில் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “பிடி பிடி…” என வீரர்கள் அலறியபடி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை, செட்டிபாளையம் எல்.என்.டி (L&T) பைபாஸ் சாலையில் உள்ள காலி மைதானத்தில், விடுமுறை நாளான நேற்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். மதியம் சுமார் 3 மணி அளவில் ஆட்டம் முடிந்து, இளைஞர்கள் தங்கள் வீடுகளுக்குக் கிளம்பத் தயாராகினர்.
அப்போது, மைதானத்தில் அமர்வதற்காக விரிக்கப்பட்டு இருந்த தரைவிரிப்பு (Mat) மற்றும் அதன் மேல் வைக்கப்பட்டு இருந்த கிரிக்கெட் பேட் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு இருந்தனர். அந்தத் தருணத்தில் எதிர்பாராத விதமாக மைதானத்தின் ஒரு பகுதியில் பலமான சுழல் காற்று (Mini Tornado) உருவானது.
4000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு.. சர்க்கரை நோய் சிகிச்சையில் அசத்தும் புதிய தொழில்நுட்பம்..!
கண் இமைக்கும் நேரத்தில் சுழன்று அடித்த அந்தக் காற்று, வீரர்கள் வைத்து இருந்த பொருட்களை அப்படியே ஆகாயத்தில் தூக்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள்,”பேட்டைத் தூக்கிட்டுப் போகுது… பிடி பிடி பிடி!” எனப் பதற்றத்துடன் கூச்சலிட்டனர். இந்த விசித்திரமான மற்றும் அச்சமூட்டும் காட்சியை அங்கிருந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.கோடைக் காலத்தில் நிலப்பரப்பில் ஏற்படும் வெப்பச்சலனம் காரணமாக இதுபோன்ற சிறிய ரகச் சுழல் காற்றுகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

