கோவையில் கல்லூரி மாணவி ஒருவரை வழி மறித்துத் தாக்கியதுடன், அவரது வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி, பீரோவில் இருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகையைக் கொள்ளை அடித்துக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், தந்தை மற்றும் உறவினர்கள் உட்பட 3 பேரை மதுக்கரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அங்கு உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த மாணவி வழக்கம் போலக் கல்லூரிக்குச் சென்று கொண்டு இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா மற்றும் நரேந்திரன் ஆகிய இரண்டு வாலிபர்கள் அவரை நடுரோட்டில் வழிமறித்துத் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.
மேலும், மாணவியின் கல்லூரி அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டதோடு, அவரை அநாகரிகமான ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர்.இச்சம்பவம் குறித்து பயந்து போன மாணவி, தனது தந்தையிடம் அழுது கொண்டே தெரிவித்து உள்ளார். அதிர்ச்சி அடைந்த தந்தை, சம்பந்தப்பட்ட வாலிபர்களிடம் சென்று தட்டிக்கேட்டதுடன், இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப் போவதாக எச்சரித்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா, நரேந்திரன் மற்றும் சூர்யாவின் தந்தை மணியரசு உள்ளிட்ட கும்பல், மாணவியின் வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் அத்துமீறிப் புகுந்தது. வீட்டில் இருந்த டி.வி, கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்திய அந்த கும்பல், பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1,50,000/- ரொக்கப் பணம் மற்றும் 2 கிராம் எடையுள்ள தங்க கம்மலைத் திருடிக்கொண்டனர்.
மேலும், மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரை ஓட ஓட விரட்டி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கு இருந்து தப்பினர்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
வீடு புகுந்து அராஜகம்.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!
அதன்பேரில், மதுக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையின் அடிப்படையில், வழுக்குப்பாறை ராமர் கோவில் வீதியைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகளான மணியரசு (46) (சூர்யாவின் தந்தை), சந்துரு (25), (சூர்யாவின் உறவினர்), சபரி (25) (சூர்யாவின் உறவினர்)
ஆகிய 3 பேரையும் போலீஸார் இன்று அதிரடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளிகளான சூர்யா, நரேந்திரன் மற்றும் இதில் தொடர்புடைய பிற ரவுடிகளைப் பிடிக்கத் தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மிரட்டல், தாக்குதல், கொள்ளை போன்ற அராஜகச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும், குண்டர் சட்டம் பாயும் என கோவை மாவட்ட காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்து உள்ளது.

