பொதுவாக ஃப்ரைடு ரைஸ் ஹோட்டல்களில் அஜினோமோட்டோ மற்றும் அதிக கெமிக்கல் சாஸ்கள் சேர்த்துச் செய்யப்படுவதால், அதை வீட்டில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கப் பெற்றோர்கள் தயங்குவதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளில் ஃப்ரைடு ரைஸ் முதலிடம் என்றே சொல்லலாம்.
ஆனால், எந்தவிதக் கூடுதல் இரசாயனங்களும் இன்றி, வீட்டில் இருக்கும் காய்கறிகளை வைத்தே நாவில் எச்சில் ஊறும் ஹோட்டல் சுவை வெஜ் ஃப்ரைடு ரைஸை மிக ஆரோக்கியமாக எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
- 2 கப்பு பாசுமதி சாதம் அல்லது உதிரியான சாதம்
- 1 கப்பு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ்
- அரை கப்பு குடைமிளகாய்
- மிகப் பொடியாக நறுக்கிய பூண்டு – 5 பற்கள்
- சிறிதளவு வெங்காயத்தாள்
- 1 ஸ்பூன் சோயா சாஸ்
- 1 ஸ்பூன் கிரீன் சில்லி சாஸ்
- 1 ஸ்பூன் மிளகுத்தூள்
- 3 ஸ்பூன் சமையல் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
Step 1: முதலில் பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்து வைக்கவும். சாதம் சூடாக இருந்தால் குழைந்துவிடும் என்பதால், ஒரு தட்டில் பரப்பி நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
Step 2: அடி கனமான இரும்பு கடாய்யில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதியைச் சேர்த்து வதக்க வேண்டும்.
Step 3: பின்னர் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் மற்றும் குடைமிளகாயைச் சேர்த்து வதக்கி காய்கறிகள் பாதி அளவு வேக வைக்கவும், அப்போதுதான் ஃப்ரைடு ரைஸ் மொறுமொறுப்பாக இருக்கும். பின்னர், சோயா சாஸ், சில்லி சாஸ், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஒரு முறை நன்றாகக் கிளறவும்.
Step 4: தொடர்ந்து, ஆற வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து காய்கறிகளுடன் நன்றாகக் கலக்கும்படி, உடையாமல் மிளகாகக் கிளறி இறுதியாக, பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்தாளைத் தூவி இறக்கினால், கமகமக்கும் சுவையான வெஜ் ஃப்ரைடு ரைஸ் ரெடி.

