கோவையில் இருந்து சேலம் புறப்பட்ட அரசு பேருந்து உத்தமசோழபுரம் என்ற இடத்தை கடந்து செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பையும் தாண்டி, எதிரே வந்த வாகனங்களில் மீது பாய்ந்தது.
இந்த விபத்தில் எதிரே வந்த டெம்போ வாகனத்தில் செல்வராஜ், அமுதா, முருகன், நித்திஷ்கா, ஜீவிகா மற்றும் கர்ப்பிணி சத்யா என ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களும், இருசக்கர வாகனத்தில் பயணித்த மணிகண்டன், இருசாயி ஆகிய இருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த பயணிகளை காவல்துறையின மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கலை தெரிவித்துள்ளளனர். அந்த வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் அருகே அரியானூரில், அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது

.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

