டெஹ்ரான் / வாஷிங்டன்: ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடித் திருப்பங்களால் உலக நாடுகள் உச்சக்கட்ட பதற்றத்தில் ஆழ்ந்துள்ளன. நேற்று திறக்கப்பட்ட பாதை இன்று மீண்டும் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுள்ள நிலையில், நடுக்கடலில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
நீரிணை மூடப்பட்டது அதிகாரப்பூர்வமானதா?
ஆம். இது வதந்தியல்ல, அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்வதைக் கண்டித்து, ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு அதன் “பழைய நிலைக்கே” அதாவது மூடிய நிலைக்கு திரும்பியுள்ளதாக ஈரானிய ராணுவத்தின் செயல்பாட்டுக் கட்டளை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முற்றுகையை ‘கடற்கொள்ளை’ என்றும் ஈரான் விமர்சித்துள்ளது.
நடுக்கடலில் துப்பாக்கிச் சூடு :
நீரிணை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தடையை மீறிக் கடக்க முயன்ற குறைந்தபட்சம் இரண்டு வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தற்போது பிரேக்கிங் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் பல கப்பல்கள் பயந்துபோய் நடுக்கடலில் யூ-டர்ன் போட்டுள்ளன.
இருப்பினும், ஷப்திஸ் , தவா 4 உள்ளிட்ட சில ஈரானியக் கப்பல்கள் அமெரிக்காவின் தடையை மீறி இந்தியப் பெருங்கடல் பகுதியை நோக்கிப் பயணித்துள்ளதாகவும் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
“டிரம்ப் அதிகம் பேசுகிறார்” – ஈரான் துணை அமைச்சர் பதிலடி:
“புதன்கிழமைக்குள் ஒப்பந்தம் இல்லை என்றால் மீண்டும் குண்டுவீச்சு நடக்கும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் தற்போது மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.
துருக்கியில் நடைபெறும் அண்டல்யா ராஜதந்திரக் கூட்டத்தில் பேசிய ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்சாதே:
“அமெரிக்க அதிபர் டிரம்ப் ரொம்பவும் அதிகம் பேசுகிறார். ஒரே அறிக்கையில் முரண்பாடான விஷயங்களைக் கூறுகிறார். போர் எந்தவொரு நல்ல முடிவையும் தராது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ஈரானின் கடைசி ராணுவ வீரன் இருக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போரிடுவோம்.” எனச் சவால் விடுத்துள்ளார்.
புதிய அமைதி முயற்சிகள் :
எகிப்து – பாக். கூட்டு முயற்சி: அமெரிக்கா – ஈரான் இடையேயான இந்தப் போரை நிறுத்த, பாகிஸ்தானுடன் இணைந்து எகிப்து, துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஒரு புதிய ‘அமைதித் திட்டத்தை’ (Peace Plan) உருவாக்கி வருகின்றன.
ஈராக் எண்ணெய் விநியோகம்: ஹார்முஸ் மூக்கடைப்பால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச விநியோகத்தை ஈடுகட்டத் தனது அனைத்து எண்ணெய் வயல்களிலிருந்தும் இன்னும் சில நாட்களில் மீண்டும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய உள்ளதாக ஈராக் அறிவித்துள்ளது.
“பாதை திறப்பு” என்ற நேற்றைய அறிவிப்பால் உலகப் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்ட நிலையில், இன்றைய “மீண்டும் மூடல் மற்றும் துப்பாக்கிச் சூடு” சம்பவங்கள் உலகப் பொருளாதாரத்தை மீண்டும் ஆட்டம் காண வைத்துள்ளன. அடுத்து என்ன நடக்கும் என்பதை ஏப்ரல் 20 இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைதான் தீர்மானிக்க வேண்டும்!

